Monday 27 July 2020

**ஸ்ரீமத்வர்**

**ஸ்ரீமத்வர்** : 

அற்புதங்கள் நிகழ்த்திய ஆன்மிகச் செல்வர்!**
...................................................................
  மத்வர் ஆன்மிகவாதியாக வாழ்ந்ததோடு, சமூக அளவிலும் பற்பல சீர்திருத்தங்களைச் செய்தார். வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைத் துறக்கச் சொன்னார். மது அருந்துவதைப் பாவம் என்றார். ராஜாராம் மோகன்ராய் வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும்  வழக்கத்தைக் கண்டித்தார். 
...................................................................

   *ஸ்ரீமத்வாசாரியர் சீடர்களுக்குக் கல்விபோதித்துக் கொண்டிருந்தார். மாபெரும் பண்டிதர். ஏராளமான கிரந்தங்களை எழுதியவர். அந்தக் கிரந்தங்களைப் புரிந்துகொள்வதே கடினம். அப்படியிருக்க யார் அவற்றுக்கு உரையெழுதப் போகிறார்கள்? 

 `சுவாமி! உங்களின் அற்புதமான கிரந்தங்களுக்கு உரையெழுதப் போகிற புண்ணியசாலி யார்?`- ஒரு சீடர் கேட்டார்.

 ஸ்ரீமத்வாசாரியர், `இதோ நாள்தோறும் நான் பாடம் சொல்லும்போது அசைபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே இந்தக் காளை மாடு,  அதுதான் உரையெழுதும்!` என்றார்! 

   சாஸ்திர ஓலைச் சுவடிகளின் சாக்கை ஊர்ஊராகச் சுமந்து செல்லும் காளை மாடா உரையெழுதும்? முதுகில் சாஸ்திரங்களைச் சுமந்த மாடு, ஆசார்யாரின் போதனைகளை மூளையிலும் சுமக்கிறதா? 

இவரது கிரந்தங்களுக்கு மாடு உரை எழுதுமானால் அது தங்களுக்கு அவமானமில்லையா? மாட்டிற்கு உள்ள அறிவு கூட சீடர்களுக்கு இல்லையே என்றுதானே மக்கள் நினைப்பார்கள்? 

  சீடர்களில் ஒருவர் கடும் கோபமடைந்தார். `அப்படியானால் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது!` என்று சபித்தார். அடுத்த கணம் எங்கிருந்தோ விரைந்து வந்தது ஒரு நாகப்பாம்பு. காளை மாட்டை ஒரு கொத்துக் கொத்தியது. 

  ஸ்ரீமத்வர் உரக்கச் சொன்னார்: 

  `என் சீடனின் சாபம் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது என்பதுதான். அந்த வாக்கியத்தில் சாக வேண்டியது எருதா பாம்பா என்று தெளிவாக இல்லை! 

என் கிரந்தங்களுக்கு எருது உரை எழுதுவது ஒருபுறம் இருக்க, என் சீடனின் சாபத்திற்கு இப்போதே நான் உரை எழுதுகிறேன்! இந்த எருதைப் பாம்பு கடித்ததும் பாம்பு சாகக் கடவது!` 

  அடுத்த கணம் பாம்பு இறந்துபோயிற்று.  
 
  ஸ்ரீமத்வர் கமண்டலத்தில் இருந்த நீரை எருதின்மேல் தெளித்தார். 

  `எருதின் இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேளுங்கள்!` என்றார். சீடர்கள் எருதின் உடலுக்குள்ளிருந்து ஒலித்த மந்திர சப்தங்களைக் கேட்டு வியந்தார்கள். 

 *அந்த எருதுதான் மறுஜன்மத்தில் ஜயதீர்த்தராகப் பிறந்து தமது கிரந்தங்களுக்கு உரை எழுதும்* என மத்வர் அறிவித்தார். இன்னும் கொஞ்ச காலம் அந்த எருது உயிரோடிருந்து தாம் இனிச் சொல்லப்போகும் கிரந்தங்களையும் கேட்டுக் கிரகித்துக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

  அப்படியே மறுஜன்மத்தில் எருது ஜயதீர்த்தராகப் பிறப்பெடுத்து மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதியது என்பது சீடர்களின் நம்பிக்கை. தன் காலத்தில் உரை எழுத முடியாத அளவுக்கு ஆழமான கிரந்தங்களை எழுதிய இந்த மத்வாசார்யர் யார்?....

  மத்வர் ஆன்மிகவாதியாக வாழ்ந்ததோடு நிற்கவில்லை. சமூக அளவிலும் பற்பல சீர்திருத்தங்களைச் செய்தார். 

வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைத் துறக்கச் சொன்னார். மது அருந்துவதைப் பாவம் என்றார்.

 ராஜாராம் மோகன்ராய் வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வேத ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அந்தக் கொடுமையான வழக்கத்தைக் கண்டித்தார். 

  *ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர். அவரது தத்துவம் துவைதம் எனப்படுகிறது. ஆதிசங்கரர் அத்வைதத்தையும் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தையும் நிறுவியவர்கள். 

ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம். (அவரது படத்தில் அவரின் வலக்கை விரல்கள் இரண்டு என அடையாளம் காட்டுவதைக் காணலாம்.)

  மத்வரது அவதாரத்தை ஒட்டி ஒரு புராணக் கதை நிலவுகிறது. இன்றைய உடுப்பிக்கு அருகில் பாஜுக ஷேத்திரம் என்றொரு திருத்தலம் உள்ளது. அங்கே வாழ்ந்த மத்தியகேக பட்டரும் வேதவதியும் தான் மத்வரின் பெற்றோர். மத்வர் பிறக்கும் முன் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  

  மணிபத்ரன் என்ற அரக்கன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான். முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணங்களோடு கூடிய உடலுடன், தான் பிறக்க வேண்டும் என வரம் கேட்டான். அவ்வகையில் தேவ நிலையை அல்லவா அவன் கேட்கிறான்? 

பிரம்மாவுக்கு அந்த வரத்தை அவனுக்கு அளிக்க மனமில்லை. என்றாலும் கேட்ட வரத்தைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? பிரம்மா வரம் கொடுத்துவிட்டார். மணிபத்ரன் சூட்சும உருக்கொண்டு வேதவதியின் வயிற்றில் புகுந்துவிட்டான். 

  ஓர் அரக்கன் தேவ லட்சணங்களோடு பிறந்து தேவனாவான் என்றால் அனர்த்தங்கள் விளையுமே? தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். வாயு உதவிக்கு வந்தார். 

அவன் முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணங்களோடு `பிறக்கத்தானே` வரம் கேட்டான்? `பிறக்கட்டும்`. பிறந்த உடன் அவன் ஆன்மாவை வெளியே தள்ளி அந்த உடலில் நான் புகுந்துவிடுகிறேன் என்றார் வாயு. தேவர்கள் இந்த யுக்தியைக் கேட்டு மகிழ்ந்தார்கள். 

  1238 ஆம் ஆண்டு விஜயதசமியன்று வேதவதி குழந்தையைப் பெற்றெடுத்த மறுகணம் அந்தக் குழந்தையின் உடலில் இருந்து மணிபத்ரன் ஆன்மாவை வெளியேற்றித் தான் அந்த உடலில் புகுந்துகொண்டார் வாயு. வாயுவின் அவதாரமே மத்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

  எல்லா ஆசார்யர்களின் வரலாற்றிலும் உள்ளதுபோலவே மத்வர் வரலாற்றிலும் அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் சொல்லப்படுகின்றன. அவை மிக சுவாரஸ்யமானவை. 

மற்ற மகான்களைப் போல் அல்லாமல் சிறு வயதிலிருந்தே மத்வர் அற்புதங்கள் நிகழ்த்தும் இயல்பு பெற்றிருந்தார். 

   மத்வருக்குப் பெற்றோர் இட்டபெயர் வாசுதேவன் என்பது. சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது, மேயப்போன மந்தைப் பசுக்களில் ஒரு பசுவின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே மேய்ச்சல் நிலமான காட்டிற்குப் போய்விட்டனாம் வாசுதேவன். 

காட்டில் என்ன நடந்தது என்று வாசுதேவனுக்கும் அந்தப் பசுக்களுக்கும் தான் தெரியும்! பெற்றோர் பதறி ஊரெல்லாம் தேடித் தேடிக் கதறி அழுதார்கள். 

  மாலை பசுக்கள் இல்லம் திரும்பின. ஒரு பசுவின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த சிறுகுழந்தை சிரித்துக் கொண்டே கீழே குதித்ததைப் பார்த்து ஓடோடி வந்தாள் தாய் வேதவதி. யசோதை கண்ணனைக் கட்டிக் கொண்ட மாதிரி, குழந்தையைக் கட்டிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அவள்! 

மகான்களைக் குழந்தையாகப் பெற்ற தாய்க்கல்லவா தெரியும் அத்தகைய குழந்தையை வளர்ப்பதில் உள்ள கஷ்டம்!
 
 *வாசுதேவனின் தந்தை இரண்டு காளை மாடுகள் வாங்கவேண்டி ஒருவரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். இதோ அதோ என்று நாட்கள் பறந்துகொண்டிருந்தனவே ஒழியக் கடன் அடைபடவில்லை. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து கத்தத் தொடங்கிவிட்டார். 

  ஐந்தே வயதான வாசுதேவன், அவரைத் தோட்டத்திற்குக் கூப்பிட்டான். ஒரு புளிய மரத்தடியில் அவரை நிற்கச் சொல்லிக் கொஞ்சம் புளியங்கொட்டைகளைச் சேகரித்தான். `நீட்டுங்கள் கையை!` என அந்தப் புளியங்கொட்டைகளை அவர் கையில் போடலானான். 

என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு புளியங்கொட்டையும் ஒவ்வொரு தங்க நாணயமாக அவர் கரத்தில் விழுந்தது. (அவர் எவ்வளவு கடன் கொடுத்தாரோ அத்தனை நாணயங்கள் விழுந்த பிறகு மீதமுள்ளவை வெறும் புளியங்கொட்டைகளாகத் தான் விழுந்தன!)

அந்த நாணயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் போட்டுக் கொண்ட அவர் வாசுதேவக் குழந்தையின் காலில் விழுந்தார்! வாசுதேவனை ஒரு மகான் என ஊரும் உலகமும் இனம் கண்டுகொண்டது அப்போதுதான். 

   ஏழெட்டு வயதாயிருந்தபோது வாசுதேவன் உறவினர்களோடு உடுப்பி அருகே உள்ள சிடியூரில் ஒரு கல்யாணத்திற்குச் சென்றான். கல்யாண வீட்டிலிருந்து திடீரெனக் காணாமல் போய்விட்டான்.

 அவ்வூரின் அருகேயுள்ள கானகத்தில் `கானன` என்றொரு கோயில் இருந்தது. சங்கர நாராயணர் கோயில். அந்த மூர்த்தியை வழிபட்ட வாசுதேவன், `நாளேகுடே` என்ற இன்னோர் ஊருக்கு அங்கிருந்தே நடந்து சென்றான். அங்கிருந்த மூர்த்தியையும் வழிபட்டான்.

பின்னர் உடுப்பி சென்று சந்திர மெளலீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தான். அதன்பின் கல்யாண வீடு உள்ள சிடியூருக்குத் திரும்பினான். 

  மழலை மொழியில் தான் சென்ற ஆலயங்கள் பற்றிக் கூறினான். கேட்டவர்கள் முகவாய்க் கட்டையில் கைவைத்து ஆச்சரியப் பட்டார்கள். `இங்கெல்லாம் தனியாகவா போனாய்?` என்று அவர்கள் கேட்ட கேள்விக்குச் சிறுவன் வாசுதேவன் சொன்ன பதில் அவர்களை வியக்க வைத்தது. 

  `என்னுடன் பகவான் சங்கர நாராயணர் வந்தாரே? அவர் கையைப் பிடித்துக் கொண்டுதான் நான் போனேன்!`  

  வாசுதேவனின் இளம் வயதில் நடந்த இன்னொரு சம்பவம். ஒருநாள் துவாதசி. அவன் தந்தை அதற்கு முந்தின நாள் ஏகாதசி விரதம் இருந்தவர். துவாதசியன்று சீக்கிரமே அவர் உணவுண்ண வேண்டும். 

ஆனால் அவ்விதம் உணவுண்ணாமல் தந்தை எங்கோ அவசரமாகப் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த வாசுதேவன் கேட்டான்:

 `அப்பா! இன்று சீக்கிரம் போஜனம் செய்ய வேண்டும். நீங்கள் வெளியே புறப்படுகிறீர்களே? நேரத்திற்குத் திரும்பி வந்து சாப்பிடாவிட்டால் விரத பலனே போய்விடுமே?`

 தந்தை பெருமூச்சோடு பதில் சொன்னார்:

  `என்ன செய்வது? நான் அனந்தேஸ்வரம் கோயில் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் சாப்பிடுவது வழக்கம். சுவாமி தரிசனம் செய்யாமல் போஜனம் செய்ய மனம் ஒப்பவில்லை!`

  `நாம் சுவாமியைப் போய்ப் பார்க்காவிட்டால் என்ன? சுவாமியை இங்கே வரவழைத்துப் பார்த்துவிட்டால் போயிற்று!`

 வாசுதேவன் பூஜையறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு மந்திர ஜபம் செய்ய ஆரம்பித்தான். அப்போது நடந்தது அந்த அற்புதம்....

(நிறைவுப் பகுதி நாளை....)

No comments:

Post a Comment